கவிதை

***மாதங்களின் ராணி***

மாதங்களில் சிறந்தவளே
மார்கழியே!
வருக.. வருக..
மண் குளிர.. மனம் குளிர..
வருக.. வருக..
உன்னை நினைக்கையிலே
முதுகுத் தண்டில்
ஊசி ஏற்றுகிறாய்..
ஞாலம் வென்ற மாவீரனும்
நடுநடுங்கி நிற்பான்
உன் முன்னே..

மாதங்களின் ராணி உனக்காக
வாசல் தோறும எம் பெண்கள்
பசுஞ்சாணமிட்டு.. மாக்கோலமிட்டு..
பிள்ளையார் பிடித்து நடுவில் வைத்து
பூசணிப்பூ தலையில் வைத்து
மங்கலம் சேர்க்கின்றனர்..
வைகறை நீராடி
ஆலயம் சேர்ந்து
பக்தி போற்றுகின்றனர்..

கார்த்திகையின் தங்கை நீ..
தைமகளின் தமக்கை நீ..
தேவர்களின் புகழ் பாட
உகந்த காலமகள் நீ..

சைவமும் வைணவமும்
பேதமின்றி போற்றுகின்றாய்.. ஏகாதசியில்..
அரங்கனின் தரிசனம் காணலாம்
திருவாதிரையில்..
ஆருத்ரா தரிசனம் காணலாம்

கோதை நாச்சியார்
திருப்பாவை பாடலாம்..
மாணிக்க வாசகர்
திருவெம்பாவையும் பாடலாம்..

மாதம் முழுக்க இருவரையும்
மனமுருகித்  துதிப்போம் நாம்..
இறுதியில்..
தீமைகளை எரித்து
விடைபெற்றுச் செல்வாள்
மார்கழி..

நல்வாழ்வுக்கு வழிகாட்டி
அடியெடுத்து வைப்பாள்
தைமகள் ..😍😍😍

_சாரதா ஞானசேகரன்

Comments

Popular posts from this blog

கவிதை

கவிதை

கவிதை