கவிதை

  கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நான் இளங்கலை கணிதம் பயின்று பட்டம் பெற்ற 25_வது ஆண்டு இது..உடன் பயின்ற தோழிகளுக்காக what's app குழுவில் பதிவிட்ட கவிதை


*** (94) தேவதைகளுக்கு                          சமர்ப்பணம்***

கிருஷ்ணன் இல்லா பிருந்தாவனம்
எங்கள் கிருஷ்ணம்மாள் கல்லூரி..
கோபியர் நாங்கள் 
கதைத்து கதைத்து
 கல்வி கற்றதெல்லாம்
வெறும் மூன்றாண்டுகள் தான்..
அள்ளிச் சென்ற நினைவுகளோ
ஆண்டாண்டுக்கும்..

உணவு இடைவேளைகள்
எங்களுக்கு
உணவருந்த மட்டுமல்ல..
தோழிகளின் 
சிரிப்பொலியும் பேச்சுச்சுவையும்
அம்மாவின் கை சாப்பாட்டுடன்
போட்டி போடும்..

Abstract Algebra வும் .. Analytical Geometry யும்..
அலுக்கும் வேளைகளில்..
எங்கள் சித்ராக்களும் சுசீலாக்களும்
வாய் திறப்பார்கள்..
துள்ளலிசைக்கு உள்ளம் துள்ள
உற்சாகம் பெறுவோம்
மொத்த நாளுக்குமாய்..

இங்கு 
கேட்டது கிடைத்தது எங்களுக்கு..
அரவணைக்கும் ஆசிரியர்கள்..
தோள் கொடுக்கும் தோழிகள்..
ஆடத் தெரிந்தவளுக்கு
 மேடை கிடைத்தது..
விளையாடத் தெரிந்தவளுக்கு
 கோப்பை கிடைத்தது..
பாடத் தெரிந்தவளுக்கு
பாராட்டு கிடைத்தது..
பேசத் தெரிந்தவளுக்கு
மைக் கிடைத்தது..
எழுதத் தெரிந்தவளுக்கு
பேனா கிடைத்தது..
திறமைகளுக்கு 
பரிசும் கிடைத்தது..
தேர்வுகளையும்  சாதனையாக்கினோம்..
வெற்றிகளை சாதகமாக்கினோம்..

வானவில் வாழ்க்கை
முடியும் நாளும் வந்தது..
தோள் மீது தோள் சாய்ந்து
தேம்பித்தேம்பி அழுதோம்..
கையொப்ப ஏட்டில்
கண்ணீரால் கையெழுத்திட்டு
பிரியா விடை கொடுத்தோம்..

ஆளுக்கொரு திசையில் பறந்தோம்..
சிலருக்கு உள்ளூரில் வாழ்க்கை..
சிலருக்கு வெளியூரில்..
சிலருக்கு வெளிநாட்டில்..
காணாதிருந்தாலும்
நினைவில் வாழாதிருக்கவில்லை..

ஆண்டுகள் கடந்தன..
தொழில்நுட்பம் வளர்ந்தது..
மாபெரும் ஆலமரத்தின்
விழுதுகளாய்
உலகெங்கும் பரவியிருந்தவர்களை
இணையத்தின் வலைப்பின்னல் 
இறுக்கியது..
What's app குழுவில் இணைத்தது..

ஒருவரையொருவர் வரவேற்கிறோம்..
வணக்கம் சொல்கிறோம்..
நிழற்படங்கள்
பரிமாறிக் கொள்கிறோம்..

சற்றே உடற்பருமன்..
அழகு நரை..
முகத்தில் கொஞ்சம் சுருக்கங்கள்..
காலம் போட்ட கோலங்கள்..
கண்ணுக்குப் தெரியவில்லை..
மனதிற்கும் தெரியவில்லை..
அவை 94_ஐ தாண்டவில்லை..

நிழற்படம் பகிர்ந்து கொண்ட நாம்..
முகம் பார்த்து
நிஜங்களை பகிர்ந்து கொள்ளும் நாள்
தொலைவில் இல்லை..
எதிர்நோக்கி காத்திருக்கும்
உங்கள் அன்புத் தோழி...😊😊😊

_ சாரதா ஞானசேகரன்





Comments

  1. கல்வி கற்றதெல்லாம்
    வெறும் மூன்றாண்டுகள் தான்..
    அள்ளிச் சென்ற நினைவுகளோ
    ஆண்டாண்டுக்கும்..
    /*வாழ்நாளுக்கும் அல்லவா ?...அருமை */


    மனதிற்கும் தெரியவில்லை..
    அவை 94_ஐ தாண்டவில்லை..
    /*அழகு */

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை

கவிதை

கவிதை