கவிதை

#அரும்புகள்
#குழந்தைகள்தின சிறப்புக் கவிதை

உன் இதழ் குவித்து தந்த
சிறு முத்தத்தில்
என் மன அடுக்குகளில்
தேங்கிய கவலைகள் எல்லாம்
சீட்டுக்கட்டு கோட்டையென
சரிந்து விட்டன..

யசோதையின் கூற்றை
இது வரை நான்  நம்பியதில்லை
ஆனால்
உன் முத்துப் பல்வரிசை தெரிய
நீ சிரிக்கையில்
உன் பற்களுக்கு ஊடான இடைவெளியில்
மூவுலகையும் காண்கிறேன் நான்..

மழலையென்று கூறி நீ இசைக்கும்
சிம்ஃபொனியில் சொக்கிப் போய்
தினம் ரசித்த
 சுசீலாவையும் சித்ராவையும்
யேசுதாஸையும் இளையராஜாவையும்
மறந்தே தான் போய்விட்டேன்..

நடனமாடப் போகிறேன்
என்று சொல்லி
உன் பிஞ்சுப் பாதங்களை
பஞ்சுப் பொதிகளெனத் தூக்கி
அபிநயம் பிடிக்கையில்
நடராஜரும் தொலைந்தே போய்விட்டார்..

அம்மாவுக்கு ஒரு வாய்
அப்பாவுக்கு ஒரு வாயென
வெறும் அஞ்சு விரல் குவித்து
சோறூட்டுகையில்
பாற்கடல் அமுதமே என்
தொண்டைக்குள் இறங்கியது..

பிள்ளைக்கனியமுதே!
குழந்தைகள் தினம் இன்று மட்டுமல்ல
வருடத்தின் எல்லா தினமும் எனக்கு
உன் தினம்தான்..

கற்க நீ கசடற கல்வியை..
வளர்க நின் நற்சிந்தனைகள்..
வாழ்க நீ கலாம் போன்ற மாமனிதனாய்..

-சாரதா ஞானசேகரன்

Comments

Post a Comment

Popular posts from this blog

கவிதை

கவிதை